சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என ரஜினி கட்சி ஆரம்பிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக சாடினார்.
நடிகர் ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். ஆனால், மூன்று வருடங்களாக கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. உடல்நிலை காரணங்களுக்காக கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் அறிவிக்கப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாக தான் ஜனவரி மாதம் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார் ரஜினிகாந்த்.
பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ரஜினிகாந்த் முடிவை மாற்றிக்கொண்டு கட்சி ஆரம்பிக்க இருக்கிறார் எனவும், அவர் பாஜகவின் முகமாகவே இருப்பார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதே குற்றச்சாட்டை மறைமுகமாக இப்போது முன்வைத்துள்ளார் ஸ்டாலின்.
read more: முதல்வர் வேட்பாளரை பாஜக முடிவு செய்யும்: எல்.முருகன்
சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, உரையாற்றிய ஸ்டாலின், நம்மால்தான் அடுத்து ஆட்சி அமைக்க முடியும். நாம்தான் வெற்றிபெறப் போகிறோம். ஆனால் அந்த வெற்றியை சாதாரணமாக அடைய நம்மை விடமாட்டார்கள். நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோமா அப்போதுதான் வெற்றியடைய முடியும். முழுமையாக நாம் உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்தியில் பாஜக ஆட்சியின் அதிகார பலம். மாநில அதிமுக ஆட்சியின் பண பலம். இந்த இரு ஆட்சியின் ஊதுகுழல்களாக அனைத்து ஊடகங்களும் மாறிவிட்டது. இந்த மும்முனைத் தாக்குதலில் மாட்டியிருக்கிறோம். இதெல்லாம் புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் நமக்கு எதிராக புதுப் புது அஸ்திரங்களை ஏவுகிறார்கள். சிலரை கட்டாயபப்படுத்தி கட்சி தொடங்கச் செய்கிறார்கள் என ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின், எல்லா சதிகளையும் செய்கிறார்கள். இதனால் நாம் சோர்வு அடைந்துவிடக் கூடாது. ஆறாவது முறை வெற்றி அடைய ஆறு மடங்கு உழைக்க வேண்டும் என்றார்.
அத்துடன், இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டாக வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.