முந்திரி ஆலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்பி ரமேஷ் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்கு பிறகு ரமேஷ் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 20ம் தேதி வேலைக்கு சென்ற இவர், வீடு திரும்பாத நிலையில், கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டதாக திமுக எம்பி ரமேஷின் உதவியாளரிடம் இருந்து வீட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதனால், அதிர்ந்து போன குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். மேலும், திமுக எம்பி டி.ஆர்.வி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தி தனது தந்தையை கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தில் உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்காமல் ஓய மாட்டேன் என உறுதி பூண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கோவிந்தராசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோரிக்கையை ஏற்று ஆணை பிறப்பித்தனர். அதன்படி, ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரது வாயிலும் காதிலும் விஷம் ஊற்றப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், முந்திரி ஆலை தொழிலாளர்களிடம் அளித்த வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகளும் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தது. இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கொலை வழக்கில் எம்பி சிக்கி இருப்பதால், அவரை கட்சியில் இருந்து நீக்கும் முடிவாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சராக பொறுப்பேற்ற போதே ஸ்டாலின் கூறியது நினைவு கூறத்தக்கது.