திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் அணி: செயலாளராக டி.ஆர்.பாலு மகன்

திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணியை அமைத்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்துக்கு வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் வரும் தேர்தலில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கலாம்.


இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “திமுக சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திமுக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திமுக சட்டதிட்ட விதி 31 – பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அணியின் செயலாளராக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, இணைச் செயலாளர்களாக தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாகவும் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இவர்களில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா. தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக அப்துல்லா இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

read more: அஞ்சல் தேர்வில் தமிழ் புறக்கணிப்பு எதிராக போராட்டம்: அமைச்சர்


வெளிநாடுகளில் பணிபுரியும் பலரும் திமுகவுக்கு சாதகமாக சமுக வலைதளங்களில் இயங்கி வருகின்றனர். கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் திமுகவுக்கு கிளைகளும் உருவாக்கி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தபால் வாக்குகளை அளிக்க முடிவெடுத்துள்ளதால் இவ்வாறாக புதிய அணியை திமுக உருவாக்கியுள்ளது.

Exit mobile version