போராடும் விவசாயிகள் தரகர்களா? முதல்வருக்கு ஸ்டாலின் எதிர்ப்பு!

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை தரகர்கள் என முதல்வர் கொச்சைப்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது என்ற முனைப்பில் திமுக தற்போதே தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது. தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இரண்டாம் கட்ட காணொலிப் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.


அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன், எப்போதும் வெள்ளத்தால் சூழப்படும் கடலூர் மாவட்டத்துக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வேன் என கூறினார். எம்.சி.சம்பத் தொழில் துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் இருக்கிறார். கடலூர் மாவட்டத்துக்கு என்ன புதிய தொழில் நிறுவனத்தைக் கொண்டு வந்தார்? அதைச் சொல்லத் தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதுவரை வேளாண் சட்டங்களை ஆதரித்து வந்த பழனிசாமி, இப்போது விவசாயிகளையே கொச்சைப்படுத்தவும் தொடங்கி இருக்கிறார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள், தரகர்கள் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இதை விட விவசாயிகளைக் கொச்சைப்படுத்த முடியுமா? கேவலப்படுத்த முடியுமா என்றவர்,


“இவர் தான் வெல்லமண்டி தரகராக இருந்தவர். தரகராக இருந்தவர், விவசாயி வேடம் போடுவதால் உண்மையான விவசாயிகள் எல்லாம் தரகர்களாகத் தெரிகிறார்கள். டெல்லியில் போராடுபவர்கள் தரகர்கள் என்றால், அதை டெல்லியில் போய் சொல்வதற்கு பழனிசாமிக்குத் தைரியம் உண்டா” எனவும் சவால் விடுத்தார்.

read more: முதல்வர் பிக்பாஸ் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது: கமல் ரியாக்‌ஷன்


தொடர்ந்து, “உங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை அடமானம் வைக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. என்று நாட்டு மக்கள் உங்களுக்கு உணர்த்தப் போகும் தேர்தல் தான் இந்தத் தேர்தல்” என்ற ஸ்டாலின்,


“சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை. அதில் ஈனமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்!” – என்று ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப் பாட்டு இன்றைக்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்குப் பொருந்தும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் தேர்தல் இது” எனவும் எம்.ஜி.ஆர் பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.

Exit mobile version