முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே அவரின் சிறப்பான திட்டங்களுக்கும், சீரிய நடவடிக்கைகளுக்கும் மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதல்வரின் ஆலோசனையின் படி அமைச்சர்களும் துறை சார்ந்த விவகாரங்களில் அதிரடி காட்டி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே திமுக அமைச்சர்கள் செல்லும் இடமெல்லாம் தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடம்பர வரவேற்பை தவிர்க்க வேண்டும் என்றும், பொன்னாடை, மலர் கொத்துக்கு பதிலாக புத்தங்களை மட்டுமே பரிசளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் திமுக அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் “தமிழகம்100 – தளபதி100” என்கிற தலைப்பில் தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழா ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றுள்ளார். அவரை வரவேற்பதற்காக விழா குழு சார்பில் திமுகவின் கட்சி கொடி நிறமான கறுப்பு, சிவப்பில் 500 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மாலையை தயாரித்துள்ளனர். அதனை கிரேன் மூலம் தூக்கி, அமைச்சர் கழுத்தில் போட்டு தடபுடலாக வரவேற்பு கொடுக்க வேண்டுமென நினைத்துள்ளனர். மாலையை பார்த்து உடன்பிறப்புக்களே ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார்களாம். இதனிடையே நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேரு பிரம்மாண்ட மாலையை பார்த்து ஷாக்கானதோடு, எதுக்கு இந்த தேவையில்லாத ஆடம்பர, ஆர்ப்பாட்டம் எல்லாம்… இந்த மாலை எனக்கு வேண்டாம் என கறாராக மறுத்துவிட்டாராம். விழா குழுவினரும் அமைச்சரின் சொல் படியே வரவேற்பை வாபஸ் வாங்கியுள்ளனர். தற்போது இந்த பிரம்மாண்ட மாலையின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.