கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் அந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன. தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.
இருந்தாலும் கோவேக்ஸின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்டப் பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர். சத்தீஸ்கர் மாநில அரசு தனது மாநிலத்தில் கோவேக்ஸின் தடுப்பூசியை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தான் ஏன் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவில்லை என விளக்கம் அளித்தார்.
மக்கள் அனைவரும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற அவர், “பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று பார்த்ததால், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என உறுதியளிக்கிறேன். ஆகவே, கொரோனா தடுப்பூசியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
read more: புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ சங்கர் மாரடைப்பால் திடீர் மரணம்!
மேலும், “நான் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் முன்கள பணியாளர் ஒருவருக்கு ஒரு ஊசி குறையும் என்பதால் தான் எடுத்துக் கொள்ளவில்லை: தாமரை போன்ற முக மலர்ச்சியோடு மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்” என தமிழிசை வலியுறுத்தினார்.