ரசம் வைத்து குடித்தால் கொரோனா சரியாகிவிடும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து குடித்தால் கொரோனா வைரஸ் சரியாகிவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

இந்தியாவிலேயே மகராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம்தான் கொரோனா பரவலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். அதன்பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர், “அனைவரும் மிளகு ரசம், வெள்ளை பூண்டு ரசம், சுக்கு ரசம் குடிக்க வேண்டும், மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து, ஒரு கிளாஸ் அல்லது அரை கிளாஸ் ரசத்தை குடித்தால் கொரோனா வைரஸ் பறந்து போய்விடும் அல்லது இறந்துவிடும். நானும் தினமும் ரசம் குடிப்பேன். நான் எங்கு சென்றாலும் ரசம் குடிப்பேன்” என்று கூறினார்.


கொரோனா, உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற பொதுமக்கள் அச்சமின்றி உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதுபோல மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றவர், சளி, இருமல் இருந்தால் பயப்பட வேண்டாம் மருத்துவமனை அருகிலேயே இருக்கின்றது என்றும், நடந்தே மருத்துவமனைக்கு வந்துவிடலாம் என்று குறிப்பிட்டார்.

read more: பள்ளிகளைத் திறப்பதற்கு பாமக எதிர்ப்பு!


கொரோனா ஆரம்ப காலத்தில், தன்னிடம் அதனை குணப்படுத்துவதற்கு மருந்து இருப்பதாகக் கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ரசம் குடித்தாலே கொரோனா சரியாகிவிடும் என அமைச்சர் பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Exit mobile version