விவசாயிகளை குழந்தை போல பாதுகாத்து வருகிறோம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

விவசாயிகளை குழந்தை போல பாதுகாத்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலையொட்டி விறுவிறுப்பான பிரச்சாரம் களைகட்டத் துவங்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வெற்றிநடை போடும் தமிழகம் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை அடுத்து, கோவில்பட்டியில் அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.


விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் இழப்பீட்டுத் தொகை உயர்த்தியது அதிமுக அரசு எனவும், மக்காச்சோளத்தில் ஏற்பட்ட அமெரிக்கன் படைப் புழு தாக்குதலை தடுக்க, அரசே 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருந்து தெளித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்ததாகவும், தமிழக விவசாயிகளை குழந்தைபோல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.


ஆனால், விவசாயத்தை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார். ரவுடிகளோடு இருப்பதால் அதற்கு ஏற்றார் போலவே ஸ்டாலின் நடந்துகொள்கிறார். அதிமுகவை உடைத்து இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுக அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார் எனக் குற்றம்சாட்டினார்.

read more: திமுக மாநாட்டில் கலந்துகொள்ளும் ஓவைசி


இந்த ஆட்சி மக்களாட்சி, இதை மக்கள்தான் ஆள்கின்றனர். கிராமசபை மூலம் மக்களை குழப்பி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருங்கள்.நேர்மையான வழியில் மக்களை சந்தித்தால் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது மக்கள் அளிப்பார்கள் என்றும் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

Exit mobile version