இரண்டு கட்டங்களாக தமிழக சட்டமன்றத் தேர்தல்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாகவே நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தற்போதே சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ தேர்தல் நடைபெறலாம் என கட்சிகள் எதிர்பார்க்கின்றன.


திமுக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்க, அதிமுக முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றது. ஆனால், புதிய மாவட்டங்களில் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்க நிறைய காலம் செலவாகும் என்பதால் முன்கூட்டியே தேர்தல் நடைபெற சாத்தியமில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்தார்.


இந்த நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பள்ளி நாட்கள், பண்டிகை நாட்களை கணக்கில் கொண்டு தேர்தல் தேதியை அறிவிக்க இருக்கிறது தேர்தல் ஆணையம்.


இந்தியாவிலேயே கொரோனா பரவல் அதிகம் கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்தது. கொரோனா பரவும் அச்சுறுத்தல், தற்போது வந்துள்ள உருமாறிய கொரோனா ஆகியவை காரணமாக இரண்டு கட்டங்களாக தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவுள்ளது. தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகிறது.

read more: விவசாயிகளை குழந்தை போல பாதுகாத்து வருகிறோம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு


கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலும் இரண்டு கட்டங்களாக நடந்தது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version