ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக!

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தின் போது பேசிய ரஞ்சன் குமார், தமிழ்நாட்டில் சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன என்கிற நிதர்சனத்தை ஏற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, அரசு வேலை என்பதோடு முடித்துக்கொள்ளாமல், சாதிப் பிரச்சினைகள் அதிகம் உள்ள மாவட்டங்களைக் கூடுதல் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும். திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் படி (வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசு இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில், நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டவன் தான். மக்கள் மனதில் மாற்றம் வேண்டும். எல்லா மக்களும் சமம் என்ற நிலை வரவேண்டும். இருமணங்கள் சேர்ந்துவிட்டால் அது திருமணமாக முடியவேண்டுமே தவிர, கொலையாக மாற கூடாது. பிள்ளைகளிடம் பேசி அவர்களின் தேவைகளை கேளுங்கள்.
அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றங்கள் என்றார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வி.சி.க எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தமிழரசு, மாநில பொதுச் செயலாளர் பி.வி.தமிழ் செல்வன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், வழக்கறிஞர் அணுகுண்டு ஆறுமுகம், எஸ்.சி.துறை மாநில துணைத் தலைவர் கோவை காந்தி, பொதுக்குழு உறுப்பினர் உமாபாலன், மாநில செயலாளர்கள் ரஞ்சித் குமார், விஜயசேகர், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர்கள் ஆயிரம் விளக்கு ரஞ்சித் குமார், ராஜலட்சுமி, தேனி இனியவன், நாகர்கோவில் மணிகண்டன், திருவள்ளூர் ரங்கநாதன், மாநில நிர்வாகிகள் மாலதி, மஞ்சுளா, மேரி வைலட், தர்மபுரி ராமசுந்தரம், லாந்தை ராஜா, திருமங்கலம் சக்கரவர்த்தி, இளைஞர் அணி பொதுச்செயலாளர் பாலஸ்ரீ, செயலாளர் அஸ்வின், மாணவரணி வினோத் குமார், பேரூர் மயில், வீரன் நிலவன், ஸ்டான்லின், சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version