ஆறுமுகசாமி ஆணைய வழக்கை விசாரணைக்கு எடுக்கவிடாமல் அப்பல்லோ நிர்வாகமும், வழக்கறிஞரும் முட்டுக்கட்டை போடுவதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் “ஆறுமுகசாமி ஆணைய” விசாரணைக்கு தடைகோரிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் மனு மற்றும் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனை தரப்புக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், இவ்வழக்கின் வாதம் இன்று முடிவடையாது!! ஏனெனில் தங்களது தரப்பு வாதம் முடிவடைய சில தினங்கள் ஆகும் என்பதால் வழக்கை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் எனவும் தனக்கு தனிப்பட்ட வேலை உள்ளதால் வழக்கை “தசரா” விடுமுறைக்கு பின் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட, ஆறுமுசாமி ஆணையம்/தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர்நாப்டே, இந்த வழக்கில் வாதிட ஒன்றும் இல்லை! ஏற்கனவே அனைத்தும் முடிந்து விட்டது எனவும் ஆணைய விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது எனவும் வாதத்தை முன்வைத்தார். எனவே இன்றே வழக்கை விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என வலியுனுத்தினார். மேலும் , எப்போதும் ஒரு வழக்கில் வாதம் செய்ய தயாராக இருக்க வேண்டும். எனவே எதிர்தரப்பினரது கோரிக்கை முற்றிலும் சரியானது அல்ல என தெரிவித்தார். மேலும், இவ்வழக்கின் விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் இவ்வழக்கில் கிட்டதட்ட அனைத்தையும் விசாரித்து முடித்து விட்ட நிலையில், இடையில் வழக்கில் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவால் ஆணையத்தின் பணிகள் நிறைவடையாமல் இருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வேண்டுமென்றே வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் அப்பல்லோ நிர்வாகமும்! வழக்கறிஞரும்! முட்டுக்கட்டை போடுகின்றனர் நீதிபதி முன் குற்றசாட்டினை முன்வைத்தனர். இதனை எல்லாம் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு அக்டோபர் 20க்கு ஒத்திவைத்து விரிவாக விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.
ஆனால், தமிழக அரசு/ஆறுமுகசாமி ஆணையம் தரப்பிலான வழக்கறிஞர், ஒவ்வொரு முறையும் இவ்வாறு தான் கூறப்படுகிறது!! ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும்போது வாதிட வழக்கறிஞர் தயாராக இல்லை, போதிய நேரம் இல்லை என பல்வேறு காரணங்கள் கூறி வழக்கு விசாரணை தள்ளி போகிறது என தெரிவித்தனர். அதோடு, இது முறையல்ல என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞரை சமாதனம் செய்ததோடு 20ம் தேதி வழக்கு விரிவாக நிச்சயம் விசாரணைக்கு எடுக்கப்படும் என உறுதியளித்து வழக்கை ஒத்திவைத்தனர். அதற்கு ஆறுமுக சாமி தரப்பு வழக்கறிஞர், அக்டோபர் 20ம் தேதியாவது இந்த வழக்கை விசாரணை பட்டியலில் முன்னதாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.