வாகனங்களுக்கு எப்.சி. அளிப்பதில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனியார் நிறுவன அனுமதி
ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு எப்.சி.க்குச் செல்லும் வாகனங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்துதான் “ஒளிரும் பட்டை”, “வேகக் கட்டுப்பாட்டுக் கருவி”, “ஜி.பி.எஸ். கருவி” போன்றவை வாங்கிப் பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டு, அதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்குள், சில தனியார் நிறுவனங்களை அனுமதித்து, அவற்றின் மூலம் மெகா வசூல் செய்து கொண்டிருக்கும் மோசடிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் வழியாகவே “எப்.சி.” வழங்கிட வேண்டும் என்று அனைத்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிடச் செய்திருப்பது, கோமாளித்தனம்.
துக்ளக் தர்பார்
மேலும், அந்த நிறுவனம் அளிக்கும் தகுதிச் சான்றிதழின் அடிப்படையில் மோட்டார் வாகன அதிகாரி சான்றளிக்க வேண்டும் என்கிறது அந்தச் சுற்றறிக்கை. இது என்ன அரசு நிர்வாகமா? அல்லது துக்ளக் தர்பாரா? அப்படிச் சான்றளிக்கும் முன்பு, தனியார் நிறுவனத்தின் வெப்சைட்டிற்குச் சென்று அந்தச் சான்றிதழ் உண்மையானது தானா என்பதை ஆன்லைன் மூலம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள். அரசுத் துறையை, தனியார் கம்பெனிகளின் எடுபிடியாக ஆக்கியிருப்பது வெட்கக் கேடானது. இவை அனைத்தும் ஊழல் செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட ‘செட்அப்’.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
அரசுத் துறையை, தனியார் நிறுவனத்திற்கு அடிமையாக்கும் அளவிற்கு, அந்தத் தனியார் நிறுவனங்களுக்கும் – போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும் அப்படி என்ன நெருக்கமான உறவு? என்ன கூட்டணி?
தனியார் நிறுவனங்களிடம், இப்படியொரு கொள்முதலுக்கு உத்தரவிட்டுள்ளதற்கு என்ன கமிஷன்? இவை முறைப்படியான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவை. இதுகுறித்து எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, உடனடியாகத் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
