சசிகலா வருவார் என்ற அச்சத்தில் ஜெ. நினைவிடம், அ.தி.மு.க அலுவலகத்தில் போலீஸ் நிறுத்தம்

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு அமமுக சார்பிலும் அ.தி.மு.க தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருந்து, சசிகலா தங்கப்போகும் தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் வீடு வரை சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. 32 இடங்களில் தொண்டர்கள் கூட்டமாக இருந்து சசிகலாவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்காமலும் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சசிகலா தியாகராயநகருக்கு செல்லும் வழி பற்றிய தகவல் போலீசாருக்கு அ.ம.மு.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சசிகலா அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்ற தகவல் இல்லை. என்றாலும் சசிகலா திடீரென்று அந்த 2 இடங்களுக்கும் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுத்து நிறுத்த அந்த 2 பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version