ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளதை தொடர்ந்து வன்முறை மூண்டது.
தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான பட்டாபி ராம், செய்தியாளர்களிடம் பேசும் போது, ஆந்திர முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் தெலுங்கு தேச கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டது.இதனால், மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினருக்கும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பதற்றமான இடங்களில் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீதும் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில டிஜிபி உறுதியளித்துள்ளார்.