உதயநிதி ஸ்டாலின் மீது குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு!

முதல்வர், சசிகலாவை அவதூறாகப் பேசியதாக உதயநிதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அரங்க பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்குபெற்றார். அதில் பேசும்போது, “மோடிக்கு எடுபிடியாக இருப்பதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு’ என்றதோடு அவதூறான வார்த்தை ஒன்றையும் தெரிவித்து சிரித்தார்.


இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணிச் செயலாளருமான ஜெயானந்த் திவாகரன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.


சசிகலாவின் காலைப் பிடித்ததால் முதலமைச்சர் ஆனார் எடப்பாடி பழனிசாமி என்றுதான் சொன்னதாக விளக்கிய உதயநிதி, தன்னுடைய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

read more: ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா மீது போலீஸில் புகார்


இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக உதயநிதி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் ராஜலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார் என ஏற்கனவே உதயநிதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version