மந்திரிசபை விஸ்தரிப்புக்கு ஒப்புதல் பெற முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (புதன்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

கர்நாடக மந்திரிசபையில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளன. அதனால் பீகார் தேர்தலுக்கு முன்பே மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் தீவிரமாக பங்கேற்று இருந்தனர். அதனால் பீகார் தேர்தல் முடிவடையும் வரை மந்திரிசபை விஸ்தரிப்பை ஒத்திவைக்குமாறு எடியூரப்பாவுக்கு அக்கட்சி தலைவர்கள் அறிவுறுத்தினர். மேலும் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலும் இருந்ததால், மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி எடியூரப்பா, “பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணியில் எங்கள் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பணிகள் நிறைவடைந்ததும் நான் டெல்லிக்கு சென்று, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிப்பேன்“ என்றார். அதன் அடிப்படியில் தற்போது பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணிகள் முடிந்து விட்டது. மேலும் மந்திரிசபையில் சரியாக செயலாற்றாத சிலரை நீக்குவது குறித்தும் முதல்-மந்திரி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு இன்றே பெங்களூரு திரும்புகிறார். இவரின் டெல்லி பயணத்தினால் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.