வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால்தான் முதல்வருக்கு பாவமன்னிப்பு-சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால்தான் முதல்வருக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சேலத்தில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:-
பச்சைத் துரோகம்
பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்துகொண்டிருக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. யாருக்கு இதனால் பாதிப்பு? என்று கேட்கிறார் முதல்வர். இந்த மூன்று சட்டங்களையும் விவசாயிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை என்று எதையும் இந்த சட்டங்கள் சொல்லவில்லை.

அனைத்து விவசாயிகளையும் தவிப்புக்கு ஆளாக்க நினைக்கிறார்கள். கொரோனா காலத்தில் அவசர அவசரமாக இந்த சட்டங்களை எதற்காக நிறைவேற்ற வேண்டும்? வேளாண்மை பற்றி மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று தான் சட்டத்தில் இருக்கிறது. அதை மீறி மத்திய அரசு எதற்காக தலையிட வேண்டும்?
இழப்பீடு, மானியம் உண்டா?
இந்தச் சட்டத்தில் விவசாயிக்கு இழப்பீடு உண்டா? கடன் தள்ளுபடி உண்டா? உணவு தானிய மானியம் உண்டா? உர மானியம் உண்டா? இடு பொருள்கள் இருப்பு மற்றும் விநியோகம் உண்டா? பொருட்களை பதப்படுத்தி வைக்க நிதி உதவி உண்டா? விவசாயத் தொழிலாளர்க்கு வேலை உத்தரவாதமோ, குறைந்தபட்சக் கூலியோ உண்டா? எதுவும் இல்லை. இதனால் தான் இந்த சட்டங்களை விவசாயிகளும், நாமும் எதிர்க்கிறோம்.

இவை எதற்கும் பதில் சொல்லாத முதல்வர், விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். எடப்பாடியில் தக்காளி பயிரிடும் விவசாயி, அதிக விலைக்காக பஞ்சாப் போய் விற்பாரா? அல்லது அவரை பஞ்சாப் மார்க்கெட்டுக்கு போகச் சொல்கிறாரா?
ஊழல்கள் அம்பலம்
நம் கட்சி மீது, தலைவரின் மீது, என் மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகள். அவரது ஊழல்களை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவருடைய ஊழலை மூடி மறைப்பதற்காக 2ஜி-யாம், ராசாவாம், சர்க்காரியா கமிஷனாம். என்ன ஆனது அந்த வழக்கு. 2ஜி வழக்கு என்ன ஆனது?

விவாதிக்க தயாரா?
ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்குப் போன வரலாறு உங்கள் வரலாறு. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை நாங்கள் அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறோம் இதுதான் திமுக வரலாறு.
தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், ராசாவுடன் விவாதிக்கத் தயாரா? கம்பெனிகளோடு விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று முதல்வர் சொல்கிறார். அந்த ஒப்பந்தம் மீறப்பட்டால், நீதிமன்றம் போக முடியாது என்பது அவருக்குத் தெரியுமா?

பாவமன்னிப்பு
நானும் விவசாயி என்று ஊர் ஊராக சொல்கிறார். இந்த விவசாயியால் விவசாயிகளுக்கும் பயனில்லை. மக்களுக்கும் பயனில்லை. அவரை வீட்டுக்கு அனுப்பும் பணியில் நாட்டு மக்கள் முழுமையாக ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில், விவசாயிகளைக் காக்க மக்களைக் காக்க மண்ணைக் காக்க நாம் போராட வேண்டி உள்ளது. முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு செய்த தனது துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள முன்வர வேண்டும். முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் அவருக்கு பாவமன்னிப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்


Exit mobile version