முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி ராஜா காலமாகியுள்ளார்.
திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் வீரபாண்டி ராஜா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று தான் அவருடைய பிறந்தநாள் என்பது அவரது குடும்பத்தினரிடையே கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இன்று தன்னுடைய பிறந்தாளை ஒட்டி தன்னுடைய தந்தை ஆறுமுகத்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு திமுக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்தமகன் செழியன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் காலமான நிலையில் தற்போது இரண்டாவது மகனின் மரணமும் நிகழ்ந்து திமுகவிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க மதுரைக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த நிகழ்வுகளை முடித்த பிறகு சேலம் சென்று வீரபாண்டி ராஜாவின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.