அரசு வீட்டிற்கு செல்கிறது, மக்கள் ரோட்டிற்கு வந்து விட்டனர் எது செய்தாலும் மக்கள் ஒட்டுப் போட போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தலைமைப் பண்பும், ஆளுமையும் என்கின்ற தலைப்பில் பேசுவதற்காக ஒரு மாணவர் அமைப்பின் அழைப்பின் பெயரில் இன்று கோயம்புத்தூர் செல்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய சில நிகழ்வுகள் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழந்தை நடந்து போய்க்கொண்டிருக்க கூடிய போது ஒரு காமுகன் அந்த குழந்தையை கசக்கி போட்டு உள்ளான். சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் அவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது சிந்தித்தால் எல்லோருக்கும் மிக மிக வேதனையாக இருக்கிறது.
எதனையும் கண்டுகொள்ளாத முதலமைச்சர் திமுக நிர்வாகிகளிடம் மக்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள் உறுப்பினராக்குங்கள் பாஜக , அதிமுகவை பற்றி பேசுங்கள் எனக் கூறுவது என்பது வேதனை அளிக்கிறது. அந்த வீடியோவை பார்க்கும் பொழுது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது இது எதையும் கண்டுகொள்ளாத முதலமைச்சர் 2026 பொதுத் தேர்தலில் 30 சதவீதம் வாக்கு எப்படி வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டினார்.
ஐந்து மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமாம். ஏனென்றால் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாம். இவர்களால் இதற்கு முன்பு இந்த மக்கள் ஊழல் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுதான் உள்ளார்கள். தேர்தல் வரும் பொழுது இது போன்ற நடவடிக்கை எடுப்பது என்பது கவலை அளிக்கிறது.
திருச்சி சிவா, காமராஜரை பற்றி பேசியது தவறு என்று கூறவில்லை. இன்றோடு இதனை விட்டு விடுங்கள் என்று கூறுகின்றேன். இதுவே பாஜக பேசியிருந்தால் உடனே ஆர்ப்பாட்டம் பண்ணி இருப்பார்கள். பேசுனா போதுமா, மன்னிப்பு கேட்டால் போதுமா என்று கேட்பார்கள்.
பண மதிப்பிழப்பை செய்தபோது ஒரு தலைவர் இருந்திருந்தால் என்னை பாராட்டிருப்பார் என்று மோடி, காமராஜரை சுட்டிக் காட்டினார். எனவே காமராஜர் எல்லோருக்குமான தலைவர். ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை படித்து இருக்கிறது என்றால் அதில் காமராஜர் உடைய பங்கும் உள்ளது. காமராஜரை நாங்கள் காங்கிரஸ்காரராக பார்க்கவில்லை. ஏனென்றால் கடைசி காலத்தில் காமராஜருக்கு மதிப்பளிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கி பல நாட்கள் ஆகிவிட்டது. அவர்களுக்கு இப்போது எல்லாம் பெரிய பெரிய பெட்டி தான் தெரிகிறது.
திமுக கூட்டணி இன்றைக்கு வெலவெலத்துப் போய் இருக்கிறது. ஏனென்றால் கூட்டணியில் ஆட்சி வேண்டும் என்று செல்வப்பெருந்தகையும் பேசி உள்ளார். தம்பி கார்த்திக் சிதம்பரமும் பேசி உள்ளார். மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் திமுக உள்ளது. நேற்றைய தினம் ஆசிரியர்களுக்கு ஆதரவாக எங்களுடைய தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்து நேரில் சென்று பார்த்துள்ளார். வீட்டுக்கு அரசு செல்கிறது என்று கூறுகிறார்கள் எல்லோரும் ரோட்டுக்கு வந்து விட்டார்கள் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள் என பலர் ரோட்டுக்கு வந்து விட்டனர் என தெரிவித்தார் இதையெல்லாம் விட்டுவிட்டு 2026ல் 30% வாக்கு வாங்க வேண்டும் அதனால் மக்களிடம் சென்று பேசுங்கள் என்று முதலமைச்சர் சொல்கிறார். எப்படி சொன்னாலும் மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட போவதில்லை என தமிழிசை தெரிவித்தார்.