காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு அரசு வேலை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ராணுவ வீரர் வீரமரணம்
தூத்துக்குடி, கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி லடாக்கில் வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் இரங்கல்
காஷ்மீர், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி, கோவில்பட்டி, திட்டான்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.

அரசு வேலை
மேலும், ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version