7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வது அதிகளவில் குறைந்தது. இதனால் நீட் தேர்வை ரத்துசெய்து விட்டு பழைய முறையான கட் ஆப் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என பாஜகவைத் தவிர தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைக்கின்றன.
ஆனால், மத்திய அரசு அதற்கு பிடிவாதமாக மறுத்து வருவதோடு, இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தையும் நிராகரித்தது. இதனிடையே அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவம் பயில 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்தது. இதன்மூலம் 401 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
இந்த நிலையில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக பூஜா என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த நான், மூன்றாவது முயற்சியில் நடப்பு ஆண்டு நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால், எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.r
read more: கொரோனா அதிகரிப்பு: குளிர்கால கூட்டத் தொடர் ரத்து!
இவ்வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போதிலும் இடம் கிடைக்கவில்லை. ஆனால், நீட்டில் 200 மதிப்பெண் கூட எடுக்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இது நியாயமற்ற வகையில் இருக்கிறது. ஆகவே இந்த வழக்கின் விசாரணை முடியும் வரையிலும் உள் ஒதுக்கீட்டு இடங்களை இறுதிசெய்யக் கூடாது என உத்தரவிட வலியுறுத்தினார்.
அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்ட நீதிபதிகள், அரசுப்பள்ளி மாணவர்களை எதிரியாக பார்க்கக் கூடாது என்றும், ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதை உறுதி செய்யவே உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள்.