சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம் திமுக மற்றும் சட்டமன்றச் செயலாளர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
சட்டமன்றத்திற்கு குட்கா கொண்டுவந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. அத்துடன், நோட்டீஸில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து புதிய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமை மீறல் குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதனால், புது நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். கு.க.செல்வம் தனியாக வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, உரிமைக் குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு.
தடையை நீக்க வேண்டுமெனவும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சட்டமன்றச் செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக பேச்சுரிமை அடிப்படையில் சட்டமன்றத்துக்குக் கொண்டு சென்றதாக விளக்கம் அளித்தார்.
முதல்வரை மாற்ற வேண்டுமென ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தது, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக வாக்களித்ததை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால்தான் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று வாதிட்டனர்.
ஆனால், உரிமைக்குழு முன்பு விளக்கமளிக்க வாய்ப்புள்ள நிலையில், நீதிமன்றத்தை எம்.எல்.ஏ.க்கள் நாடியிருக்க தேவையில்லை என்று சட்டமன்றச் செயலாளர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு பெரும்பான்மையோடுதான் இருந்ததாகவும், அதனால் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் உரிமை மீறல் பிரச்சினை கையில் எடுக்கப்பட்டது எனக் கூறுவது தவறானது என்றும் விளக்கப்பட்டது. இதனையடுத்து, அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.