முதல்வரை தேவையின்றி விமர்சிக்காதீங்க…ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அட்வைஸ்!

முதல்வர் பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேவையின்றி கடுமையாக விமர்சிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முதல்வர், சபாநாயகர் மற்றும் தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஆதாரமில்லாமல் விமர்சித்ததாகக் கூறி தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுபோல தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.


இந்த நிலையில் மற்ற அவதூறு வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொது மேடைகளில் தமிழக முதல்வர் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.


ஸ்டாலின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என்றார். அரசியல் ஆதாயத்துக்காக மு.க.ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இதுபோன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என அறிவுறுத்தினார்.

read more: பிரதமர், முதல்வரைக் கண்டித்து திமுக கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதம்!


முதல்வர், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமிருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டுமென தவிர பொதுவெளியில் கடுமையாக விமர்சிப்பது பொதுமக்களிடையே தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்தும்.அவதூறு வழக்குகளை ரத்து செய்து பிறப்பிக்கப்படும் நீதிமன்ற உத்தரவுகளை தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என கூறினார் நீதிபதி.


ஆரோக்கியமான அரசியலை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக தமிழகம் திகழ வேண்டுமென தலைவர்களுக்கு அறிவுறுத்தி, ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்தார். மற்ற அவதூறு வழக்குகளின் விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தார் நீதிபதி.

Exit mobile version