தமிழக பாஜக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் ‘NaMo Meal’ திட்டம் தொடக்கம்

ஏழை எளிய மக்களுக்காக உணவு வழங்கும் “NaMo Meal” திட்டத்தை தமிழக பா.ஜ.கவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தொடங்கி வைத்தார்.

‘NaMo Meal’ என்பது ஏழை எளிய மக்களுக்காக உணவு அளிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று தமிழக மண்ணிலிருந்து பாரதியார் கூறிய வாக்கிற்கிணங்க, தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் முயற்சியாக சென்னையில் இந்தத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. “குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள ஏழை மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளுடன் இந்தத் திட்டம் செயல்படும். விரைவில் இது தமிழகம் முழுவதும் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் உணவு பெற வேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கத்தில் எங்களுடைய குழு இந்த முயற்சியை எடுத்துள்ளது” என இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குணசேகரன் கூறினார்.

மிகவும் சத்தான உணவுகளை உயர்ந்த தரத்தோடு ஏழை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதும், குறிப்பாக ஒரு வேளைக்கு ஒரு நபர் சாப்பிடும் அளவான 200 கிராம் அளவில் சாம்பார் சாதம் முதல் பல்வேறு விதமான சாதங்கள் வரை கொடுப்பதற்கும் திட்டமிட்டிருக்கிறது இந்த குழு.

“பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பசியில்லாத இந்தியாவை உருவாக்கவும், ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல உன்னத திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். அவரின் கனவை அடிப்படையாக கொண்டு இந்த திட்டத்தை அவரின் பெயரிலேயே தொடங்கியிருக்கிறோம். விரைவில் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு மாதந்தோறும் ஒரு வேளையாவது உணவு சென்று சேர திட்டமிட்டிருக்கிறோம்” என இந்த திட்டத்தை தொடங்கிவைத்து தமிழக பா.ஜ.கவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பேசினார்.

Exit mobile version