சிங்காரச் சென்னையில் உணவுத்திருவிழா ‘பீப்’ பிரியாணிக்கு அனுமதி

சென்னை உணவுத்திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில்  “சிங்கார சென்னையில் உணவு திருவிழா” என்ற மூன்று நாள் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த உணவுத்திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 வகையான தோசைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணெய் வகைகள், மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பீப் பிரியாணி கடை வைக்க யாரும் அனுமதி கேட்கவில்லை. கேட்டால் நிச்சயம் அனுமதி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்திருந்தார். இதையடுத்து 3 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்படவுள்ளது. நேற்று தொடங்கிய இந்த உணவுத்திருவிழா இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

Exit mobile version