காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குலாம்நபி ஆசாத் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி 5 பக்கங்களுக்கு சோனியாக காந்தி கடிதம் எழுதினார். அதில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் ராகுல்காந்தி. அவர் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தார். சோனியாவும் பெயரளவில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார் என குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், அவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும், அந்த கட்சி முதலில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் முழு கவனம் செலுத்தும் என்றும் அதன்பிறகு தேசிய அரசியலில் களமிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பல காங்கிரஸ் அதிருப்தி தலைவர் குலாம் நபி ஆசாத்துடன் தொடர்பில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி குழுவை சேர்ந்தவர்கள். சசி தரூர், மனிஷ் திவாரி, ஆனந்த் சர்மா உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். வாரிசு அரசியல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததே தோல்விக்கு காரணம் கட்சியில் சீர்திருத்தங்கள் தேவை என அவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், முன்னாள் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
