“மாறிமாறி பேசுவதுதான் திமுகவின் திராவிட மாடல்”

மாறிமாறி பேசுவதுதான் திமுகவின் திராவிட மாடல் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சியில் முன்னாள் அமைச்சர் சிவபதியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் கூறுகிறார். அது அவரின் நிலைப்பாடு.சேர்ந்து செயல்பட வேண்டாம் என்பது தொண்டர்களின் நிலைப்பாடு. பதவி ஆசை இல்லை எனக்கூறும் ஓபிஎஸ், எதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினார் என கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், எட்டுவழிச் சாலைக்கு யார் ஆட்சியில் இருந்தாலும், நிலத்தை கையப்படுத்தினான் சாலை அமைக்க வேண்டும். மாற்றுப்பாதை வழியாக சாலை அமைக்க சாத்தியமில்லை. இத்திட்டம் குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும், இருக்கும் போது ஒரு பேச்சும் பேசுகிறார். இதுதான் திமுகவின் திராவிட மாடல். அதிமுக ஆட்சியின் போது தமிழகத்துக்கு ₹10,000 கோடி வரவிருந்த எட்டுவழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டு தற்போது அந்த திட்டம் வருவதில் எங்களுக்கு ஆட்சேபினை இல்லை என்கிறார்.

அதிமுகவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட ₹14,000 கோடி மதிப்பிலான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் முடங்கி கிடப்பது வருத்தம் அளிக்கிறது. எங்கள் மீது இருக்கும் கோபத்தை  எங்களிடம் காட்டலாம். மக்களுக்கு கொண்டுவந்த திட்டங்களை புறக்கணிப்பது நியாயம் இல்லை என்றார். மேலும், ஆறுகுட்டிபோல் எந்த குட்டியும் செல்லவில்லை. எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளனர் என்று தெரிவித்தார்.

Exit mobile version