கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்ததால் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை ஆளுநர் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கம் போல் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் தாமதித்து வருகிறார். மேலும், துணைவேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமை செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார்.
இந்த மசோதா மூலம் துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் இருந்த துணைவேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.துணைவேந்தர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை குறிப்பிட்டது நினைவுக்கூரத்தக்கது.