விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

விரைவில் அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு நிலவு வருகிறது. வரும் 2026ம் ஆண்டு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் உண்மையான தர்மம், நீதி வென்றுள்ளது. விரைவில் பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறும். ஏற்கெனவே தொகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத முதலமைச்சர், தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்சனைகளை வழங்குமாறு கேட்டுள்ளார். இருப்பினும் எனது தொகுதி உள்பட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைத்து தொகுதிகளிலும் 10 பிரச்சனைகளை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version