சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்…கமல்ஹாசன் அறிவிப்பு!

வரும் சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  மதுரையில் மக்கள் நீதி மய்யம்  கட்சியைத் துவங்கினார் நடிகர் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலை  இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். கமல்ஹாசன் கட்சிக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமான வரவேற்பு இருந்தது. சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் மூன்றாவது இடமும் பிடித்தது.


இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்காகவும் தயாராகிவிட்டார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமல்ஹாசன், 3ஆவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதே கையோடு மதுரையில் நேற்று பிரச்சாரத்தையும் துவக்கிவிட்டார்.

read more: டிசம்பர் 18: ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் விவசாயிகள்!
இரண்டாவது நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். ஆனால், எந்தத் தொகுதி என்பது பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். என்னை நாத்திகவாதி என்று கூறாதீர்கள். அது ஆத்திகவாதிகள் வைத்த பெயர் என்றும், நான் பகுத்தறிவுவாதி எனவும் குறிப்பிட்டார்.


ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன், “ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்கான நேரம் வர வேண்டும். வரும் 31ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடுகிறார். அதன்பிறகு பதில் சொல்வதே சரியாக இருக்கும்” என்றார்.


3ஆவது அணி அமைப்பது குறித்து எந்த கட்சியேனும் அணுகியிருக்கிறதா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து யார் யாரெல்லாம் தன்னை அணுகுகிறார்கள் என்பதை தற்போது வெளியில் சொல்லக் கூடாது, அது ரகசியமானது என்று பதிலளித்தார்.

Exit mobile version