கட்சித் தலைமை உத்தரவின்படி, கட்சி பணிக்காக டெல்லி சென்றதாகவும், நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், தலைமறைவாகவில்லை என்றும் பாஜக நிர்வாகி சென்னை விமான நிலையத்தில் அமர்பிரசாத் தெரிவித்தார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத்ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அமர்பிரசாத் இன்று சென்னை திரும்பியபின் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தேர்தலுக்கு முன் என்னை கைது செய்ய காவல்துறை முயற்சிக்கிறது, மாநில தலைவர் தான் கட்சி வேலையாக டெல்லி அனுப்பியதாக தெரிவித்தார்.
டாப் 10 லிஸ்டில் நான் இருக்கிறேன். தேர்தலுக்குள் என்னை கைது செய்ய வேண்டும் என காவல்துறை திட்டம் போடுகிறது. அடுத்து 2 கேஸ்கள் போட போகிறார்களாம். எனது கட்சி தலைமை என்ன சொல்கிறதோ, அதை தான் செய்வேன். என்னை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைத்ததாக கேள்விப்பட்டேன். என்னுடன் இருப்பவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்துகிறார்கள். எங்களது கருத்துகளை பலமாக வைப்போம், என்றார்.
கட்சிக்கு தெரியும் நான் தவறு செய்யவில்லையென, அதனால் தான் மேலும் மேலும் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. காவல்துறை இதுபோல செய்தால் இளைஞர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்னை சுற்றியிருப்பவர்களை சிரமப்படுத்திவிட்டனர்.
கோட்டூர்புரம் காவல்துறையினரை 10 முறை தொடர்பு கொண்டேன். ஆய்வாளர், உதவி ஆய்வாளர் செல்போனை எடுக்கவில்லை. என் டிரைவருக்கு வேறொருவருக்கும் பிரச்சனை என என் மீது வழக்கு போடப்படுகிறது. 600 கல்லூரிகளுக்கு கவுரவ விரிவுரையாளர்களாக சென்றிருக்கிறேன். என் கல்வித்தகுதி என்ன? எங்களை பார்த்து ஏன் பயம், என்றார்.
முன் ஜாமீன் கிடைத்த பின் ட்விட்டரில் பதிவு செய்தது குறித்த கேள்விக்கு, என் ட்விட்டரில் நான் எதை வேண்டுமானாலும் பதிவு செய்வேன். டான்ஸ் ஆடுவேன். அது எனது தனிப்பட்ட விருப்பம். பாதையாத்திரையை தடுக்க வேண்டுமெனவும், பிரதமர் நிகழ்ச்சிக்கு நான் செல்வதை தடுக்கவும் காவல்துறை முயற்சிப்பதாக தெரிவித்தார்.