தமிழ்நாடு முழுவதும் சாலைகளை சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதியவர் உயிரிழப்பு
சென்னை, கோடம்பாக்கம் அருகே சாலை பள்ளத்தில் விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.
கோடம்பாக்கம் மேம்பாலத்தையொட்டிய சாலையில் ஒரு மாதத்திற்கும் மேலாகவே பள்ளம் இருந்து வந்ததாகவும், அதுகுறித்து அப்பகுதி மக்கள் 10 முறைக்கும் கூடுதலாகப் புகார் செய்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் அலட்சியம்
எவ்வளவு மோசமான பள்ளங்களையும் எளிதாகச் சீரமைக்கும் அளவுக்கு கருவிகள் வந்துவிட்ட நிலையில் சாலைப் பள்ளங்களில் விழுந்து மக்கள் உயிரிழக்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகாரிகளின் அலட்சியம்தான் இதற்கு முக்கியக் காரணம்.
சீரமைக்க வேண்டும்
சென்னையில் முக்கிய சாலைகள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மழையால் சேதமடைந்துள்ளன. மிகவும் ஆபத்தான சாலைப் பள்ளங்கள் உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாலைகளை உடனடியாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.