ஆளும் அ. தி. மு. க அரசின் பதிவிக்காலம் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது இதனால் தமிழக சட்டசபைக்கு இன்னும் 6 மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் உயர் நிலை கூட்டமும், அதனை தொடர்ந்து செயற்குழு கூட்டமும் கூட்டப்பட்டது. இந்த கூட்டங்களில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை பூதகரமாக வெடித்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்படுவதாக தகவல்கள் கசிக்கின்றன. இதனால் செயற்குழுவில் பெரும் பரபரப்பு நிலவியது. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தனர். அதேநேரத்தில், நேற்று நடந்த காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தின நிகழ்வில் அவர்கள் இருவரும் ஒன்றாக பங்கேற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை நேற்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி.யும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் சி.வி.சண்முகமும் சந்தித்து பேசினர்.
இந்தநிலையில், வரும் 6-ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என்று கட்சி தலைமையில் இருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவிப்பு பறந்துள்ளதாக நேற்று ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் கட்சி தலைமை வெளியிடவில்லை.இதனால் எம்.எல்.ஏ.க்கள் வருவதற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டதா?, இல்லையா? என்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
“அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு வரும்படி அழைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தி. இதுகுறித்து தலைமைக் கழகத்தில் இருந்து சென்னை வர வேண்டும் என்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது ஒரு ஆதாரபூர்வமற்ற செய்தி என்றும் தேவையில்லாமல் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில தீய சக்திகள் இதுபோன்ற சித்து விளையாட்டுகளை விளையாடுகின்றன. எதையும் ஆதாரப்பூர்வமாக தலைமைக் கழகத்தில் இருந்து வந்தால்தான் அதை அதிகாரபூர்வமான செய்தியாக எடுத்துக்கொள்ள முடியும். மொத்தத்தில் இது வதந்தி… வதந்தி… வதந்தி…”
இவ்வாறு அவர் கூறினார்.