பொருந்தாத வாதங்கள் மூலமாக அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவை மன்னனாக திகழ்கிறார் என்று கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நகைச்சுவை மன்னன்
அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பொருந்தாத வாதங்களின் அடிப்படையில் கருத்துகளைக் கூறுவதன் மூலம் நகைச்சுவை மன்னனாகத் திகழ்கிறார். அதை உறுதி செய்கிற வகையில் தி.மு.க. கூட்டணி செயலற்று இருப்பதாகக் கூறியிருக்கிறார். பல கட்சிகள் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாகவும் அடிப்படையே இல்லாமல் ஆதாரமற்ற அவதூறு கருத்தைக் கூறியிருக்கிறார். இக்கூட்டணி உறுதியாகச் செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
கொள்கை கூட்டணி
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி நீண்டகாலமாக ஒற்றுமையுடன் கட்டுக்கோப்பாகச் செயல்படுகிறது. மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கொள்கைக் கூட்டணி. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியைப் போல சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல.
பா.ஜ.க.வுக்கு அவமானம்
கூட்டணிக் கட்சி என்ற அடிப்படை இலக்கணத்தைக் கூட கடுகளவும் கடைப்பிடிக்காத அ.தி.மு.க. கூட்டணியை என்னவென்று அழைப்பது? அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு கேள்விக்குறி.
அதிமுக கூட்டணியில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் இருப்பதை விட ஒரு அவமானம் பா.ஜ.க.வுக்கு இருக்க முடியாது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணி பற்றிப் பேச அ.தி.மு.க.வினர் எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது. நகைச்சுவை அரசியல் நடத்துவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.