சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்: விரைவில் பிரச்சாரம்!

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டு நடந்த விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதற்காக, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது. அந்த கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.


கடந்த டிசம்பர் 13ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் தேர்தல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தனக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார் கமல்ஹாசன். 18ஆம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து, கமல்ஹாசன் ஓய்வில் இருந்தார்.


இந்த நிலையில் 5 நாட்கள் சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் நேற்று வீடு திரும்பினார். குடும்ப உறுப்பினர்கள் கமல்ஹாசனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்னும் சில நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

read more: ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் அறிவிப்பு!


இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன், சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு சீரமைப்போம் தமிழகத்தை எனும் தேர்தல் பிரச்சார பயணத்தின் இரண்டாவது சுற்றை கமல்ஹாசன் தொடங்க இருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version