இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வேண்டாம், மரியாதை வேண்டும்: கமலுக்கு நடிகை பதிலடி!

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்ற கமல்ஹாசனின் வாக்குறுதிக்கு நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகிறார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என்பது உள்பட 7 அம்சத் திட்டங்களையும் அறிவித்தார்.


இதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், கமல்ஹாசனின் யோசனையை வரவேற்கிறோம், இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர ஊதியத்தை மாநில அரசு செலுத்துவதன் மூலம், சமூகத்தில் அவர்களின் சேவை பணமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. இது அவர்களின் சக்தி மற்றும் தனித்தன்மையை மேம்படுத்துவதோடு அடிப்படை வருமானத்தை உருவாக்கும் என தனது ட்விட்டரில் குறிப்பிட்டார்.


ஆனால் இதற்கு பதிலளித்துள்ள இந்தி நடிகை கங்கனா ரனாவத், “எங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைவதற்கு ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டாம். எங்களுக்கு சொந்தமானவர்களை தாயைப் போல கவனித்துக்கொள்ள சம்பளம் தர வேண்டாம். வீடு என்னும் சிறிய மாளிகையில் அரசியாக இருப்பவருக்கு ஊதியம் தேவையில்லை. அனைத்தையும் வியாபாரமாகப் பார்க்காதீர்கள். பெண்ணிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். உங்களிடம் அன்பையும் மரியாதையையும் தான் எதிர்பார்க்கிறோம், ஊதியத்தை அல்ல” என்றார்.

read more: ரேஷன் கடை முன்பு அதிமுக பேனர்கள்: வழக்கு தொடுக்கும் திமுக

இல்லத்தரசியைச் சம்பளம் பெறும் கூலித் தொழிலாளியாகத் தரம் குறைப்பது அவளது நிலையை இன்னும் மோசமடையவே செய்யும். அவளுடைய அன்புக்கு, தாய்மை நிறைந்த தியாகங்களுக்கு விலைப் பட்டியல் இடுவது கடவுளுக்குக் காசு கொடுக்க நினைப்பதற்குச் சமமானது என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version