என் வீட்டில் கல் எறியச் சொன்னார் ஸ்டாலின்: குஷ்பு குற்றச்சாட்டு!

திமுகவில் இருந்தபோது ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் கல் எறிய ஆள் அனுப்பியதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவில் இருந்து 2014ஆம் ஆண்டு விலகிய நடிகை குஷ்பு, அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சில காலங்களாக தமிழக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத குஷ்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாத போதிலும் தமிழகம் முழுவதும் சென்று பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.


இந்த நிலையில் கன்னியாகுமரியில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு, திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


2013ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியை விவரித்த குஷ்பு, “நான் திமுகவில் இருந்தபோது திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். என்னுடைய கணவர் ஐதராபாத்தில் இருந்தார். என்னுடைய 8, 10 வயது மகள்கள் வீட்டில் தனியாக இருந்தனர். ஒரே நாள்தானே மாலையில் திரும்பிவிடலாம் எனச் சென்றிருந்தேன்.
அந்த சமயத்தில் என்னுடைய வீட்டில் திமுகவினர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். என்னுடைய மகள் அப்போது எனக்கு போன் செய்து, அம்மா வீட்டில் கல் எறிகிறார்கள், பயமாக இருக்கிறது…சீக்கிரமாக வாங்க எனக் கதறினர்” என்றார்.


ஒரு தாய் என்கிற முறையில் பதறிப்போய் ஸ்டாலினைப் பார்க்கச் சென்றேன். அவர் சாப்பிட்டுக்கொண்டிருப்பதால் இப்போது பார்க்க முடியாது என மறுத்துவிட்டனர் என்ற குஷ்பு, “ஒரு தொண்டர் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், பயமா இருக்கிறது என்று நான் அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் கூட என்னைப் பார்க்க விடவில்லை. பின்னர்தான் என்னுடைய வீட்டில் கல் வீசச் சொன்னதே ஸ்டாலின் தான் என தெரியவந்தது” எனவும் குற்றம்சாட்டினார்.

read more: டேட்டா கார்டு தந்தாலும் முதல்வருக்கு டாட்டாதான்: ஸ்டாலின் பேச்சு


மேலும், “நான் திமுகவிலிருந்து வெளியேறவில்லை. பேச்சு திறமை இருக்கிறது, அழகாக இருக்கிறேன், மக்கள் கூட்டமும் அதிகமாகக் கூடுகிறது என்பதால் போட்டியாக வந்துவிடுவேன் என திமுகவிலிருந்து வெளியே தள்ளப்பட்டேன். பாஜகவுக்கு நான் வந்ததற்கு காரணம் எனக்கு பாதுகாப்பாக அது இருக்கிறது என்பதால்தான்” என பேசினார் குஷ்பு.

Exit mobile version