”விவசாயிகளை கொன்றது யார் என அனைவருக்கும் தெரியும்… அவர்கள் பதவியில் இருக்கும் வரை கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது”- பிரியங்கா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் என நால்வரும் கடும் போராட்டத்துக்குப் பிறகு நேற்று (அக்டோபர் 6) இரவு உ.பி மாநிலம் லெகிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அக்டோபர் 3 ஆம் தேதி லெக்கிம்பூர் கெரி பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் மீது ஜீப், கார்கள் ஏற்றப்பட்டு 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அந்த கார் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷுடையது என்று சர்ச்சை வெடித்தது. அங்கே அதன் பின் ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிக்கையாளர் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நீதி வேண்டியும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் பிரியங்கா காந்தி, முன்னாள் உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்றோர் முயன்றும் முடியவில்லை பிரியங்காவை எவ்வித பதிவும் இல்லாமல் சட்ட விரோதமாக லெக்கிம்பூர் அருகே உள்ள சீதாபூரில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் தடுப்புக் காவலில் வைத்திருந்தனர் உபி போலீஸார். கொல்லப்பட்ட விவசாயிகளின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகுதான் தலைவர்களுக்கு அப்பகுதிக்கு செல்ல அனுமதி அளித்தது உபி அரசு. விவசாயிகளின் கொலைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை பாயும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.

லக்னோ விமான நிலையத்தில் புறப்பட்ட ராகுல் காந்தியும் முதல்வர்களும் சீதாபூருக்கு மாலை சென்றனர். அங்கே கெஸ்ட் ஹவுஸ்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தியை சந்தித்து அவரையும் அழைத்துக்கொண்டு நேற்று இரவு லக்கிம்பூரில் உள்ள பாலியா கிராமத்தை அடைந்தனர். அக்டோபர் 3 அன்று கொல்லப்பட்ட விவசாயிகளில் ஒருவரான லவ்ப்ரீத் சிங்கின் குடும்பத்தை சந்தித்தார்கள். அவர்களின் குடும்பத்தினரை அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டு, அடுத்ததாக . நிக்காசன் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராமன் காஷ்யப்பின் வீட்டுக்குச் சென்றனர். அதன் பின் தௌராஹா தாலுகாவில் உள்ள நச்சதர் சிங்கின் வீட்டுக்குச் சென்றனர். இரவு நேரமாகிவிட்டதால் மீதமுள்ள கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை இன்றைக்கு பிரியங்கா காந்தி சந்திக்கவுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாங்கள் இன்று சந்தித்த மூன்று குடும்பங்களுக்கும் நீதி வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. மூன்று குடும்பங்களும் இழப்பீடு பற்றி கவலைப்படவில்லை ஆனால் நீதி வேண்டும் என்று ஒரு விஷயத்தை கூறியுள்ளனர். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். அவர் உள்துறை இணை அமைச்சராக இருப்பதால் பாரபட்சமற்ற விசாரணை சாத்தியமில்லை.அவர் ராஜினாமா செய்யும் வரை இந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்காது என்றார்.
எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரின் மகனும் கைது செய்யப்பட வேண்டும். எஃப்ஐஆரும் இல்லாமல் எந்த எழுத்துபூர்வ உத்தரவு இல்லாமல் எங்களை கைது செய்ய முடிகிறது. ஆனால் எஃப்.ஐ.ஆரில் பெயர் இருக்கும்போது ஏன் அவரை கைதுசெய்ய முடியவில்லை? ” என்று கேள்வி எழுப்பினார் பிரியங்கா காந்தி.

ராகுல் காந்தி பேசும்போது, “இந்த கொலையை செய்தவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும். அவர்கள் கைது செய்யப்படும் வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் என்ன எழுதியிருக்கிறது என்றே எங்களுக்குப் புரியவில்லை என்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் ஓயாது”என உறுதியளித்தார்.

Exit mobile version