மதுரையில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற சொகுசு காருக்கு வழிவிடாத ஆத்திரத்தில் ஓட்டுநரின் கை வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்து TN -63 N-1802 என்ற எண் கொண்ட பேருந்து மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு சென்ற போது, பின்னால் வந்த இனோவா சொகுசு கார், பேருந்தை விரைவாக செல்வதற்கு பலமுறை ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றது. இந்த நிலையில் அரசுப்பேருந்தை முந்திச்செல்ல முயன்ற TN-01 BM 6166 வாகன பதிவெண் கொண்ட இன்னோவா காரில் வந்த கும்பல் பேருந்தை வழிமறித்து வழிவிடாத ஆத்திரத்தில் அரசுப்பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநரின் கையை வெட்டியதோடு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஒட்டுநர் முத்துக்கிருஷ்ணனை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்து, அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தொடர்ந்து அரசுப்பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து அடுத்தடுத்த பேருந்துகளில் வந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த கும்பல் வந்த காரிலேயே ஏறி உடனடியாக தப்பித்து சென்றுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஓட்டுனரை தாக்கியது திமுகவினர் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து,மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதையே வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன?.இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.