மாமதுரை விழா!

மதுரையில் நடைபெறும் மாமதுரை விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சாகித்ய அகாடமி விருத்தாளருமான சு. வெங்கடேசன் அவர்களால் 2013 ஆம் ஆண்டு முதல் மாமதுரை போற்றுவோம் என்கிற விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்கான விழா இன்று தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மன்னனே ஆனாலும் நீதிக்காக கேள்வி கேட்ட ஊர் மதுரை எனவும் நீதியை காக்க தன் உயிரை விட்ட மன்னனை பெற்ற ஊர் மதுரை என்றும் குறிப்பிட்டார். சென்னைக்கு அடுத்தபடியாக 1971 ஆம் ஆண்டு இரண்டாவது மாநகராட்சியாக கலைஞரால் தரம் உயர்த்தப்பட்ட ஊர் மதுரை என ஸ்டாலின் தெரிவித்தார். காந்தி தன்னை அரையாடை மனிதராக மாற்றிக் கொண்டதும் திமுக இளைஞரணி தொடங்கியதும் மதுரை தான் என குறிப்பிட்டு பேசினார். திராவிட மாடல் அரசில் இரண்டு அமைச்சர்களை மதுரைக்கு கொடுத்திருக்கிறோம் என்றும் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் விழா நடைபெறும் நாட்களில் மதுரை புத்துயிர் பெறுகிறது என்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட இந்திர விழாவை பார்ப்பது போல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மரபையும் பண்பாட்டையும் கொண்டாடும் நிகழ்வாக இருக்கும் இவ்விழாவை சாதி மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக கொண்டாடுவோம் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின் மனிதநேயம் போற்றுவோம் மக்கள் ஒற்றுமை போற்றுவோம் பண்பாட்டு விழாவை அனைவரும் கொண்டாடுவோம் என தெரிவித்தார்.

மாமதுரை விழா நடைபெறும் நாட்களில் தொல்லியல் பயணம், இரட்டை அடுக்கு பேருந்து பயணம், உணவுத் திருவிழா, வினாடி வினா, கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள், அலங்கார அணி வகுப்பு என பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

Exit mobile version