சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 13ஆம் தேதி மதுரையில் துவங்குகிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலை அனைத்து கட்சிகளைப் போலவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் துவங்கிவிட்டது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் முன்னிறுத்தப்படும் நிலையில், தேர்தலில் 3ஆவது அணி அமையும் எனவும் அவர் தெரிவித்தார். கமல்ஹாசன் தனது வீடு இருக்கும் ஆழ்வார்ப்பேட்டைக்கு அருகேயுள்ள மைலாப்பூர் அல்லது சொந்த ஊரான பரமக்குடி என இரண்டு தொகுதிகளில் ஒன்றில் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார் கமல்ஹாசன். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சீரமைப்போம் தமிழகத்தை என்ற உன்னதமான நோக்கத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13,14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்துகிறார்.
கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கட்சி உறுப்பினர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்துகொண்டு கமல்ஹாசனின் சுற்றுப் பயணத்தை சிறப்பிக்க வேண்டும். அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அதை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் மகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமல்ஹாசன் கட்சியைத் துவங்கியதும் மதுரையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.