வைகோ சாதிய கண்ணோட்டத்தில் நடப்பதாக, மல்லை சத்யா விஷ பிரசாரம் செய்வதாக மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
வாசுதேவநல்லூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது எவ்வித ஆதாரமுமில்லாத விஷ விதைகளை துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா விதைக்கிறார். அவர் சாதி ரீதியான கண்ணோட்டத்தில் நடப்பதாக கூறுகிறார். நான் சிறு வயதில் இருந்து வைகோவின் கரம் பற்றி வந்தவன். அப்போதெல்லாம் என் சாதி குறித்து அவருக்கு தெரியாது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சட்டமேதை அம்பேத்கர் உருவப் படம் வைப்பதற்கு வைகோ வழிவகுத்தார். மல்லை சத்யா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதில்லை. 4 முறை போட்டியிட்டும் அவர் வெற்றி பெறவில்லை. மதிமுக மீது குடும்ப அரசியல் குற்றச்சாட்டை மல்லை சத்யா முன்வைக்கிறார். ஆனால், எத்தனையோ பேருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் மல்லை சத்யாவின் மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் கவுன்சிலராக இருக்கிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட மல்லை சத்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, சென்னை, புறநகர் என 38 தொகுதிகளில் அவர் போட்டியிட்ட தொகுதி மட்டுமே தோல்வியை தழுவியது. அனைவரையும் சமமாக நடத்தும் வைகோ மீது அபாண்ட குற்றச்சாட்டை மல்லை சத்யா முன்வைக்கக் கூடாது. அவர் மன்னிப்பு கேட்காமல் இருந்தபோது அறிக்கை வெளியிடப்பட்டது என்று கூறும் அவர், ஏன் உடனே மறுக்கவில்லை. அவர் ஒருவேளை அதிக அதிகாரம் எதிர்பார்த்திருக்கலாம். இதுவே அவரது நடவடிக்கைக்கு காரணமாக இருக்கக் கூடும். அவரை கட்சியை விட்டு நீக்காததால், தாராளமாக கட்சிப் பணியாற்றலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சந்திப்பின்போது, மாவட்டச் செயலாளர் ஜீவன், சுப்பிரமணி, கழககுமார், மகேந்திரன், கருணாகரன், பாரத் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
