ஊராட்சி மன்றங்களுக்கு 10 மாதங்களாக நிதி வழங்கவில்லை: குற்றச்சாட்டை அடுக்கிய வைகோ

ஊராட்சி மன்றங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி தராததால், பணிகள் முடங்கி விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாத நிலை நீடித்தது. அதுவரை தனி அதிகாரிகளே உள்ளாட்சிப் பணிகளை கவனித்து வந்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது.


ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் பொறுப்பேற்று 10 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாநில நிதிக்குழு மானியம் வழங்கினால் மட்டும்தான் ஊராட்சி மன்றங்கள், குடிநீர், மின்விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். ஊழியர்களுக்கும் அப்படித்தான் ஊதியம் வழங்க முடியும். எனினும், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றதால் அதிமுக அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.


இந்த நிலையில் பத்து மாதங்கள் ஆகியும், ஊராட்சி மன்றங்களுக்கு மானிய உதவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, ஊராட்சிப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.


மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு உரிய நிதியினையும் வழங்காமல் காலம் கடத்தி வருவது, மத்திய-மாநில அரசுகள் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் கூறிய வைகோ, காலம் கடத்தாமல், மாநில நிதிக்குழு மானியத்தையும், மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியினையும் மத்திய மாநில அரசுகள் உடனே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version