அடிதூள்… மதிமுகவில் வைகோ மகனுக்கு முக்கிய பதவி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல் நலன் மற்றும் வயதை கருத்தில் கொண்டு முக்கிய பதவிக்கு அவரது மகன் தேர்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Vaiko

சட்டமன்ற தேர்தல் முடித்தவுடனேயே அதற்கான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்த வைகோ, “என் மகன் அரசியலுக்கு வருவதை நான் துளியும் விரும்பவில்லை. ஆனால் தொண்டர்கள்தான் இயக்கம்.. அவர்கள் விரும்பும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என சூசகமாக தெரிவித்திருந்தார். சென்னையில் இன்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே சென்னை முழுவதும் மதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகின. வைகோவுடன், துரை வைகோ இருக்கும் புகைப்படங்களுடன், ‘வெற்றி திருமகனே துரை வைகோ’, ‘வைகோவின் போர் முரசு’ போன்ற தீப்பொறி பறக்கும் வாசங்களைக் கொண்ட போஸ்டர்கள் கட்சி நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாகவே மாவட்ட செயலாளர்கள் கூடத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு வைகோவும், துரை வைகோவும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது இருவருக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டு, வீரவாள் பரிசளித்து மதிமுகவினர் தடபுடலான வரவேற்பு கொடுத்தனர். வைகோ அவருடைய மகனுடன் பலமுறை சென்னை வந்திருக்கிறார் என்றாலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு பல யுகங்களை கிளப்பியது.

இன்று மாலை கூட்டம் தொடங்கிய நிலையில் துரை வையாபுரிக்கு கட்சி பதவி கொடுப்பது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், வைகோவின் மகனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்த வாக்கெடுப்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வாக்கெடுப்பில் கிடைத்த ஆதரவின் அடிப்படையில், மதிமுகவின் தலைமை கழகச் செயலாளராக மகன் துரை வைகோவை நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்களிடம் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வையாபுரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென வந்ததை அடுத்து இப்பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version