அப்போது ஏன் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தவில்லை: கமலுக்கு ஜெயக்குமார் கேள்வி!

எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லி அதிமுக வாக்குகளை பிரிக்க நினைக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் கடந்த 13ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, எம்.ஜி.ஆரின் நீட்சி நான் தான், அவரது கனவான மதுரையை இரண்டாம் தலைநகராக்குவேன் என வாக்குறுதி அளித்தார். எம்.ஜி.ஆரின் பெயரை அரசியலுக்காக கமல்ஹாசன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டிய நிலையில், நான் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் என பதிலடி கொடுத்தார்.


இந்த நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 16) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தும் கமல்ஹாசனை விமர்சித்தார்.
கமல் முதலில் தனித்துப் போட்டியிடுவேன் என்றார். தற்போது கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீது உண்மையில் கமலுக்கு பக்தி இருக்குமேயானால் அவரை புரட்சித் தலைவர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

read more: பெண்களின் கோபத்திலிருந்து தப்ப முடியாது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

மற்ற கட்சிகள் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் எனக் கூறிய அவர், “கமலின் விஸ்வரூபம் படத்தை தடை செய்தபோது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன்?. எம்.ஜி.ஆர் 10 கோடி தமிழர்களுக்கும் சொந்தம். எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது, இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் வேறு யாருக்கும் போடாது” என காட்டமாக பதிலளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் படத்தை போஸ்டரில் சிறியதாக்கியவர்கள் என்னை எதிர்க்கிறார்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு, “எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியது அதிமுக. கமல் மூன்றாவது அணியல்ல, நான்காவது அணி அமைத்தாலும் அது பிணியாகத்தான் போகும்” என விமர்சித்தார்.

Exit mobile version