திமுக தலைமையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தரும் பேரணி சென்னையில் நடைபெற்றது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் வரை இந்தப் பேரணியானது நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் வைகோ, முத்தரசன், திமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை உயரதிகாரிகள், அரசின் முதன்மைச் செயலர்கள், முன்னாள் ராணுவத்தினர், சீருடைப் பணியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடி வரும் ராணுவத்தினரின் வீரம், அர்ப்பணிப்பு, துணிச்சலைப் போற்றுகிற வகையில் இந்த பேரணி நடைபெறும் என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கழிவறை, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அவசரகால மருத்துவத் தேவைகளை சமாளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பேரணி காரணமாக மாலை 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
