அஞ்சல் தேர்வில் தமிழ் புறக்கணிப்பு எதிராக போராட்டம்: அமைச்சர்

அஞ்சல் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் பதவிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவித்தது. இதற்கு எழுந்த எதிர்ப்புகளையும் மீறி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.


அஞ்சல் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், மத்திய அரசு தமிழ் உட்பட எல்லா மொழிகளையும் மதிப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். அதன் பின்னர் அந்தத் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட்டது.


சில நாட்களுக்கு முன்பு அஞ்சல் துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீண்டும் தற்போது கண்டனக் குரல்கள் வலுக்கத் தொடங்கிவிட்டன. இதனை திரும்பப் பெற்று புதிய அரசாணையை வெளியிட வேண்டுமென திமுக, அமமுக, விசிக, தவாக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.


இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அஞ்சல் துறையில் தேர்வு தமிழ் புறக்கணிக்கப்பட்ட குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும், இதுகுறித்து முதல்வர் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பார். உடனடியாக இதற்காக போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

read more: தபால் வாக்குகள்: திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்


இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மத்திய அரசு அஞ்சல் துறை தேர்வில் தமிழை கட்டாயம் சேர்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Exit mobile version