2 ஜி வழக்கில் ஆ.ராசா தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2ஜி விவகாரத்தில் தமிழகத்தின் பட்ஜெட்டைப் போல 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தது திமுகதான் என கடந்த 3ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ஆனால், ஊழல் செய்தது யார் என்பது தொடர்பாக முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சவால் விடுத்தார். அத்துடன், ஜெயலலிதாவை சொத்து சேர்த்த கொள்ளக்காரி என உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு அதிமுக அமைச்சர்கள் தடித்த வார்த்தைகளைக் கொண்டு ஆ.ராசா மற்றும் திமுகவை விமர்சித்து வருகின்றனர். ஒருபடி மேலே சென்ற செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆ.ராசாவின் கைகள் வெட்டப்படும் என்று சொன்னது பலத்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என சொல்லி உச்ச நீதிமன்றம் பண்பாட்டைக் காப்பாற்றியுள்ளது. பண்பாடு மிக்க தமிழர்களும் அதனை கடைபிடிக்க வேண்டும். மறைந்த தலைவர்களைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. அப்படி மறைந்த திமுக தலைவர் கலைஞரைப் பற்றி பேசினால் திமுகவினர் தாங்கமாட்டார்கள் என்று பதிலடி கொடுத்தார்.
2ஜி வழக்கில் வழக்கு இன்னும் முடிந்துவிடவில்லை. ஆ.ராசாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆறுமுகசாமி ஆணையம் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார். “ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மை நிலையை நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதனால்தான், தமிழக அரசு ஒரு ஆணையம் அமைத்தது. இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடை நீங்கிய பிறகு நடக்கும் விசாரணையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை நிலை நாட்டு மக்களுக்குத் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.
சூரப்பா விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆளுநர் விளக்கம் ஏதும் கேட்கவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
