சசிகலா சிறையில் இருந்து வந்தாலும்…ஜெயக்குமார் திட்டவட்டம்!

சசிகலா சிறையில் இருந்து வந்தாலும், அவருடன் அதிமுக இணையாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் விடுதலை நெருங்கி வருகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக, அமமுகவில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே வலுக்கத் துவங்கியுள்ளது.


சசிகலா சிறையிலிருந்து வந்தாலும், வராவிட்டாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சசிகலா வந்த பிறகு அதிமுகவிலுள்ள பெரும்பாலானோர் சசிகலா பின்னால் அணிவகுப்பார்கள் என ஒரு கருத்து உலாவி வருகிறது. சசிகலா ஜனவரி 17ஆம் தேதி விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் சென்னை மந்தவெளியில் அம்மா மினி கிளினீக்கை அமைச்சர் ஜெயக்குமார் இன்று துவங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், இரட்டை இலை சின்னத்தை முடக்க சதி நடக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதிமுக என்பது ஒரு எஃகு கோட்டை. இரட்டை இலையையும், அதிமுகவையும் முடக்க எந்த கொம்பனாலும் முடியாது என பதிலளித்தார்.

read more: பொங்கல் பரிசு டோக்கன் அதிமுகவினர் மூலம் விநியோகம்: வழக்கு தொடர்ந்த திமுக!

சசிகலா வந்தாலும் அதிமுக அவருடன் இணையாது, எங்களைப் பொறுத்தவரை எப்போதும் ஒரே நிலையில்தான் இருப்போம். எந்த நிலையிலும் அதிமுகவுக்கான வாக்கு வங்கி பிரிந்ததில்லை எனவும் விளக்கம் அளித்தார். அரசின் பொங்கல் பரிசை அதிமுகவினர் மூலம் விநியோகிக்கவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் இருந்தபோது அக்கட்சியின் சின்னத்தையே இடம்பெறச் செய்திருந்தனர் என்றதோடு, ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தமிழக மக்களும் அதிமுக வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் கூறினார்.

Exit mobile version