எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி: ஜெயக்குமார் திட்டவட்டம்!

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அக்கட்சி அறிவித்தது. அதிமுகவின் இந்த முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக, பாஜக ஆகியவை இன்னமும் வெளிப்படையாக வரவேற்கவில்லை.


எடப்பாடி பழனிசாமி அதிமுக என்ற கட்சியின் முதல்வர் வேட்பாளர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறினார். பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று அண்மையில் அமித் ஷா முன்னிலையில் அரசு விழாவில் ஓ.பன்னீரும், எடப்பாடியும் அறிவித்தபோதும் அதுபற்றி அமித் ஷா எதுவுமே கூறவில்லை.


இந்த நிலையில் நேற்று நடந்த அதிமுக பொதுக் கூட்ட மேடையில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. இருந்தும் முதல்வர் வேட்பாளர் குறித்து தேசிய தலைமைதான் அறிவிக்கும் எனத் தெரிவித்தார் முருகன். இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

read more: முதல்வரை சந்தித்த பாஜக தலைவர் முருகன்: கூட்டணி தொடர்கிறதா?


அப்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று விளக்கினார். மக்களவைத் தேர்தலை சந்தித்த கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. பாஜகவின் தமிழக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது, தேசிய தலைமையின் முடிவே இறுதியானது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version